×

உலக மகளிர் நாளையொட்டி திமுக அரசு தமிழக பெண்களுக்கு செய்துள்ள பல்வேறு சாதனைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டியல்

சென்னை: உலக மகளிர் நாளையொட்டி, தமிழகத்தில் திமுக அரசு பெண்களுக்கு செய்துள்ள பல்வேறு சாதனைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டியலிட்டுள்ளார். இன்று உலக மகளிர் நாள்.

இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
மகளிருக்கான உரிமையை நிலைநாட்டியதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு, நீண்ட நெடிய வரலாற்றை கொண்டது. தந்தை பெரியார் தலைமையில் 1929ம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் பெண்களுக்கு சொத்தில் சமபங்கு உரிமை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவர் வழியில் வந்த பேரறிஞர் அண்ணா தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், சுயமரியாதை திருமணத்திற்கு அங்கீகாரமளிக்கும் சட்டத்தை அவர் நிறைவேற்றினார். அண்ணாவுக்கு பின்னர் முதலமைச்சரான கலைஞர், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கும் சட்டத்தை நிறைவேற்றினார். கலைஞரின் ஆட்சி காலங்களில் மகளிரை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் பட்டியல் மிக நீளமானவை.

திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதும், பெண்களின் பொருளாதார சுதந்திரத்துக்கு வழிவகுக்கும் விடியல் பயணத் திட்டத்திற்காகத்தான் எனது முதல் கையொப்பத்தை இட்டேன். பேறுகால விடுப்பை 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தினோம். அரசு பணியிடங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 40 சதவீதத்துக்கு உயர்த்தியுள்ளோம்.

மூவலூர் மூதாட்டி ராமாமிருதம் அம்மையாரின் பெயரால் பெண்கள் உயர்கல்வி பெறுவதை உறுதி செய்யும் ‘புதுமைப் பெண்’ திட்டத்தை தொடங்கி, கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கி வருகிறோம். மகளிர் சுய உதவி குழுக்கள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்களையும், நகைக்கடன்களையும் தள்ளுபடி செய்து சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், பெண்களுக்கு 50 சதவீதம் வேலைவாய்ப்பு அளிப்பதை நடைமுறைப்படுத்தியுள்ளோம். புதிய சிப்காட் தொழிற்பேட்டைகளில் பெண்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறோம்.

சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பெரிய மாநகராட்சிகள் உள்ளிட்ட 11 மாநகராட்சிகளை (50 சதவீதத்துக்கும் மேலாக) பெண்களுக்கு ஒதுக்கி, அவர்கள் மேயர்களாக செயலாற்றும் நிலையை திமுக ஏற்படுத்தி இருக்கிறது. மற்ற உள்ளாட்சி அமைப்புகளிலும், ஒதுக்கப்பட்ட 50 சதவீதத்துக்கும் மேல் பெண்கள் தலைவர்களாகவும், துணை தலைவர்களாகவும், கவுன்சிலர்களாகவும் உள்ளது சாதனை.

இத்துடன், இந்த ஆண்டு பிப்ரவரி 21ம் நாள், தமிழ்நாட்டில் மகளிர் நலனை மேம்படுத்திடும் வகையில் “தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024”-ஐ வெளியிட்டோம். சமூகத்தின் சரிபாதியான பெண்கள் அவர்களுக்குரிய அனைத்து உரிமைகளையும், நலன்களையும் பெறும் வரை அதை நோக்கிய நமது பயணம் தொடரும் என்ற உறுதியுடன் மகளிர் நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

The post உலக மகளிர் நாளையொட்டி திமுக அரசு தமிழக பெண்களுக்கு செய்துள்ள பல்வேறு சாதனைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டியல் appeared first on Dinakaran.

Tags : DMK government ,Tamil Nadu ,International Women's Day ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,CM ,Stalin ,M.K.Stalin ,Dravidian ,
× RELATED திமுக ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள்...